மயிலாடுதுறை:திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கே.ஜி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் மற்றும் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி கலைவாணன் திடீரென்று எழுந்து மைக்கை வாங்கி, “திமுகவுக்கு புதிதாக இளைஞர்கள் வருவதில்லை. அவர்கள் ஏன் கட்சிக்கு வருவதில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அப்பொழுது பேசிய அவர், “பொதுக்குழு கூட்டம் என்று ஆவலுடன் வந்தால் பொதுக்கூட்டம் போன்று நடைபெறுகிறது. திமுக கட்சியில் உள்ளவர்களின் பிள்ளைகள் கட்சிக்கு வருவதில்லை. ஏன் இளைஞர்கள் கட்சிக்கு வருவதில்லை என்பதை சிந்திக்க வேண்டும். காரணம், ஒருவர் கட்சிக்கு சென்று விட்டால் அவர் 30 வருடம் தொடர்ந்து பதவியில் இருக்கிறார். எனவே, நாங்கள் கட்சிக்கு வந்து கொடி பிடிக்க வேண்டுமா? என்று இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.