சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது ஏற்கனவே 20 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் எவ்வாறு சுதந்திரமாக நடமாடினார் . அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவை சேர்ந்த மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஆணையத்தின் துணை செயலாளர் சிவானி தே ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை வந்தது. இந்த குழு நேற்று முழுவதும் விசாரணையில் ஈடுபட்டனர். அண்ணா பல்கலைகழக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தும் அவர்கள் பேசினார்கள்.
இதையும் படிங்க:தனியார் மூலம் தீயணைப்புதுறை தடையின்மை சான்று... அரசாணைக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் விசாரணையை முடித்து கொண்டு இன்று காலை 10.15 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, "அண்ணா பல்கலைகழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்தோம்.
தமிழ் நாடு ஆளுநரை சந்தித்து பேசினோம். விசாரணை தொடர்பான அறிக்கையை மகளிர் ஆணையத்தின் முலமாக மத்திய அரசிடம் சமர்பிக்க உள்ளோம். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் ஈடுபட்ட யாராக இருநதாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்திருப்பதாக கூறுகின்றனர். எனினும் தமிழக காவல்துறையினர் அவரை எப்படி வெளியில் நடமாடவிட்டார்கள்? காவல்துறையும் அரசும் ஏன் அவர் மீது முன் கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்,"என்று கூறினார்.