thanjavur MP candidate Murasoli தஞ்சாவூர்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பதவி வகித்து வரும் நிலையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு மறுத்துள்ளது. அதற்கு பதிலாக, தஞ்சாவூர் தொகுதியில் புதுமுக திமுக வேட்பாளாராக முரசொலியை அறிவித்துள்ளது. மேலும், 6 சிட்டிங் எம்பிக்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சீட் மறுக்கப்பட்டது ஏன்? தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக எம்பியாக தற்போது எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளார். 1984 முதல் நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகமாகி தொடர்ந்து போட்டியிட்டு வந்த இவர், இது வரை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். எம்பி தேர்தலில் 9 முறை போட்டியிட்டு, 6 முறை வெற்றி 3 முறை தோல்வியுற்றார்.
2004-2014 வரை மத்திய நிதித்துறை இணையமைச்சராக பதவி வகித்து வந்தார். மாணவர் பருவம் முதலே, திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக அறியப்படும் பழனிமாணிக்கம், பெரியார், அண்ணா, கருணாநிதி, முரசொலி மாறன், ஸ்டாலின் ஆகியோரிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டு, அவர்களுடைய கொள்கைகளில் உறுதியாக இருப்பவராகும் விளங்குகிறார்.
செயல்பாடுகளைப் பொறுத்தவரை, பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தாலும், தொகுதி பக்கம் வரவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. இதேபோல், கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எம்பி பழனிமாணிக்கத்திற்கு சீட் வழங்காமல், டி.ஆர்.பாலுவிற்கு சீட்டு வழங்கப்பட்டதால், 2014ஆம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக பரசுராமன் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தல் 2024; என்ன செய்தார் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி?
தஞ்சாவூர் திமுக வேட்பாளார் முரசொலி யார்?தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தில் கே.சண்முகசுந்தரம் - தர்மசம்வர்த்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 1978ஆம் ஆண்டு பிறந்தார், முரசொலி. இவரது தந்தை 1971ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்கத் தலைவர் பதவி வகித்தவர். முரசொலி, இயற்பியல் இளங்கலை பட்ட படிப்பை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், முதுகலை சட்ட படிப்பை பெங்களூர் ராம் மனோகர் லோகியா சட்டப் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.
இவர் 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 வரை தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், 2020 தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 2022இல் நடைபெற்ற தி.மு.கவின் 15வது அமைப்பு தேர்தலில், தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தஞ்சாவூர் திமுக வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:தருமபுரி சிட்டிங் எம்பி செந்தில்குமாருக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?