மதுரை: ‘ஆடி பட்டம் தேடி விதை’ என்பார்கள். ஆடி மாதம் மழைக்காலத்தின் துவக்க மாதம் என்பதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர் பெருகி ஓடும். இந்த நீரினை விவசாயத்திற்குப் பயன்படுத்தி நல்ல விளைச்சல் காணலாம் என்பதால் விவசாயிகள் ஆடி மாதத்தில் விதைப்பார்கள்.
இதனால் தான் ஆடி மாதம் விதைகளுக்கான மாதமாகவே கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான் விதைத் திருவிழாக்கள் பல ஊர்களில் நடைபெறும். இத்திருவிழாக்களின் நோக்கமே மரபு சார்ந்த விதைகளை பாதுகாப்பதும், அதனை பரப்புவதுமே ஆகும்.
பொதுவாக விதைகளில் பல்வேறு பிரிவுகளும், வகைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை மரபு சார்ந்த விதைகள் (traditional seeds) மற்றும் தோற்றக விதைகள் (indigenous seeds) ஆகும். இந்த விதைகளை பாதுகாப்பது பற்றியும், கலப்பின விதைகள் சந்தையில் எவ்வாறு வியாபாரம் ஆகிறது, அவைகளினால் என்னென்ன பயன்கள் என்பது பற்றியும் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வேளாண் அறிஞர் பாமயன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில், "மரபு சார்ந்த விதைகளுக்கு முன்பாகவே தோற்றக விதைகள் இங்கு உண்டு. ஒரு பயிர் அல்லது விதை குறிப்பிட்ட இடத்தில் தோன்றி வளர்ந்தால் அது தோற்றக விதை எனப்படும். உணவு சார்ந்த தோற்றக விதைகள் குறித்து வாவிலோவ் என்ற ரஷ்ய அறிஞர் அறுதியிட்டு கூறியுள்ளார். அவர் கூறியதை தான் இன்று உலகம் முழுவதும் கடைபிடித்து வருகின்றனர்.
இந்த விதைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு பல நூற்றாண்டுகளாக மக்களிடையே புழங்கப்பட்டு அவை மரபு சார்ந்த விதைகளாக தோற்றம் பெறுகின்றன. அதாவது, ஒரு பழக்கம் என்பது வழக்கமாக மாறி, அந்த வழக்கம் என்பது ஒழுக்கமாக உருவெடுத்து, பின்னர் அதுவே மரபாக மாற்றம் பெறுகிறது.
ஆனால், தற்போது உள்ள காலக்கட்டத்தில் நமக்கு வழங்கப்படுகின்ற கலப்பின விதைகள் அல்லது ஹைபிரிட் என்று சொல்லக்கூடிய விதைகளும், மரபனு மாற்றம் (Genetically Modified) செய்யப்பட்ட விதைகளும், மறுமுறை விதைக்கும்போது விளைச்சல் தருவதில்லை.
இவைகள் பூச்சி, நோய்த்தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் உள்ளன. அதிக விளைச்சல் தரக்கூடிய கலப்பின, மரபணு மாற்றம் பெற்ற விதைகள் எல்லாம் தற்போது பெரு நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிட்டன. எனவே, பெரு நிறுவனங்களைச் சார்ந்தே உழவர்கள் இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
இந்த நிலைமையை தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு உலகம் முழுவதும் உள்ள விதைச்சந்தையை பெருமளவு கைப்பற்றி வருகின்றனர். இந்த விதைச் சந்தைகள், குறிப்பாக 10 நிறுவனங்களின் கைகளில் உள்ளன. விதைச்சந்தையில் மட்டும் வருடத்திற்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் (Turnover) நடைபெறுகிறது. இது இனிவரும் காலங்களில் ரூ.8 லட்சம் கோடியாக உயர வாய்ப்பு இருக்கின்றது.
இதனால் நாம் என்ன உண்ண வேண்டும், என்ன பயிரிட வேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்களாக இந்த பன்னாட்டு நிறுவனங்கள் மாறிவிடுவார்கள். இதனால் தான் இந்த மரபு சார்ந்த விதைகளை நாம் சேகரிப்பதையும், பயன்படுத்துவதையும், அதனை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதையும் உணர்த்தும் விதமாக விதை திருவிழாக்களை கொண்டாடி வருகிறோம்.
மேலும், ஐநா மன்றமும் மரபு சார்ந்த விஷயங்களுக்கு சட்ட ரீதியான வாய்ப்புகளை பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசும் இதற்கேற்ற விதிமுறைகளை உருவாக்கி உள்ளது. ஆகையால், சட்ட விதிகளின் அடிப்படையில் உள்ளுர் அரசுகளும் உதவி செய்ய வேண்டும்.