சென்னை:இந்தியாவின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கியமான கட்சிகள் இந்த தேர்தலில் பல தொகுதிகளில் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளன. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவானது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 8 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
தென் சென்னை:தென் சென்னை மக்களவைத் தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 41.34 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன். தற்போது 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளார்.
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,13,974 வாக்குகள் பெற்று 2,24,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் ஜெயவர்தன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 26.94 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார்.
வாக்கு சரிவு:ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 1,17,274 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். மேலும், நிர்ணயிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையை பெறாததால் அதிமுக தென் சென்னை தொகுதியில் டெபாசிட்டை இழந்துள்ளது.
மேலும், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 2,89,019 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல், தென் சென்னை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் தான் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெறுவார்கள்.
ஆனால், அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இதுவே முதல் முறையாகும். மேலும், மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகள் பெற்று 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72,016 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார். பொதுவாக திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் சென்னையில் எப்பொழுதும் கணிசமான வாக்கு எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
இதையும் படிங்க:2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 5 வேட்பாளர்கள் யார்?