who will win Coimbatore Constituency கோயம்புத்தூர்:கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என இந்தியன் பொலிட்டிக்கல் டெமோகிரடிக் ஸ்டாடிஸ்டிக்ஸ் (IPDS) என்ற நிறுவனம் சார்பில் கருத்துக்கணிப்பு வெளியிட இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் மன்ற வாயிலில் வைத்து அந்த நிறுவனத்தினர் கருத்துக்கணிப்பை வெளியிட்டனர்.
IPDS அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் பிரபாகர் பத்திரிகையாளர் முன்னிலையில் அதனை வெளியிட்டு செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், கோவை மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதியில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பைச் சார்ந்த 3281 பேரிடம் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் வெற்றி வாய்ப்பு பாஜகவிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பாஜகவிற்கு 38.9% , திமுகவிற்கு 33.4%, அதிமுகவிற்கு 18.5%, நாம் தமிழர் கட்சிக்கு 6.8%, மற்ற கட்சியினர் 2.5% வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த தேர்தல் வித்தியாசமானது. அண்ணாமலைக்கு திமுக,அதிமுகவினர் வாக்களிக்க உள்ளனர்.மாற்றம் வேண்டும் என்பதால் அண்ணாமலையை ஆதரிக்கப் போவதாகவும், மாணவர்கள் நடுத்தர வயதினர், முதியவர்கள் என 3281 பேரிடம் 5 பேர் கொண்ட 7 குழுவினர் கோவை நாடாளுமன்றம் முழுவதும் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டதில் இந்த முடிவுகள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தான் பாஜகவிற்கு ஆதரவாகக் கருத்துக் கணிப்பை வெளியிடவில்லை எனவும், நேர்மையாகக் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார். உறுதியாக, ஒரு லட்ச வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெறுவார். மேலும், தேர்தல் விதிமுறைகள் படி, ஏப்ரல் 17ம் தேதிக்குப் பின்னால் தான் கட்சி சார்ந்த செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆனால், இன்று நான் கருத்துக் கணிப்பை வெளியிடக் காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தான் ஜனநாயகமா என உணர்ச்சி பொங்கப் பேசினார்.
முன்னதாக, கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கருத்துக் கணிப்பை வெளியிடக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்ததால் காவல்துறையினருடன் பிரபாகர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவாரா? - ஆருடம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த் - Lok Sabha Election 2024