விழுப்புரம்: வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவெடுத்ததால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழையை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மலட்டாறு பாலத்தை ஒட்டிய பகுதியில் சாலை துண்டிப்பு; தாலுகா அலுவலகம் அருகில் உள்ள வீடுகள் சில இடிந்து விழுந்தது; இஸ்லாமியர் தொழுகை நடத்தும் ஈத்கா திடல் கட்டிடட கோபுரம் சேதமடைந்தது; விளைநிலங்களை மண்மூடி பயிர்கள் சேதம்; டிராக்டர், டாடா ஏசி, பைக், கார்கள் என ஏராளமான வாகனங்கள் சேதம்; புதியதாய் போடப்பட்ட ஆழ்துளைக்கிணறு மாயம்; தாலுகா அலுவலக கட்டிட சுற்றுச்சுவர் சேதம்; இத்துடன் குடியிருப்பு வாசிகள் பயன்படுத்திய மின்கம்பங்கள் சில காணாமல் போயுள்ளன.
இதுமட்டும் அல்லாது, ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஏமப்பூரைச் சேர்ந்த கலையரசன் என்பவர் இறந்து மண்ணில் புதைந்திருந்த நிலையில் மீட்பு படையினர் அவரது உடலை மீட்டனர். இத்தகைய நிலையில் ஹெலிகாப்டர், விசைப்படகு, மூலம் மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலைகள் துண்டிக்கப்பட்டதால் திருவெண்ணைநல்லூர் நகரம் தீவுபோல் காட்சியளிப்பதோடு, செல்போன் டவரில் சிக்னல் இல்லாததால் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம், மயிலம் ஊராட்சி ஒன்றியம் விளங்கம்பாடி ஊராட்சியில் அமமுக சார்பாக சசிகலா நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது பொது மக்களுக்கு அவை முறையாக கிடைக்கவில்லை என நிவாரண பொருளுக்கு அடித்துக் கொண்டு, பிடுங்கி சென்றனர்.