சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி மற்றும் பிஓடி, பிபிடி, பிபார்ம், பிஏஎஸ்எல்பி, ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு மே 23ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் அருணலதா பேட்டி (Credits -ETV Bharat Tamil Nadu) மேலும், எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் கலந்தாய்வு துவங்கிய பின்னர் துணை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கும் என மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குனரும், மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளருமான அருணலதா தெரிவித்தார்.
துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கிய நிலையில், முதல் நாளிலேயே 7 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குனரும், மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளருமான அருணலதா ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, “2024-25ஆம் கல்வியாண்டில் 19 துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நேற்று முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு:பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஓடி ஆகிய 4 பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிக்கும் ஒற்றைச்சாரள முறையில் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும். மேலும், அரசுக் கல்லூரியில் 15 பாடப்பிரிவிற்கான கலந்தாய்வினையும் மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நடத்துகிறோம்.
துணை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 ஆயிரத்து 870 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 17 ஆயிரத்து 446 இடங்களும் உள்ளன. மாணவர்களுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வந்த பின்னர், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்திய பின்னர் துணை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படும்.
விதிமுறைகள்:மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அல்லது அதற்கு சமமான குழுமத்தால் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை எடுத்து படித்து இருக்க வேண்டும். நீட் தேர்வு எழுதத் தேவையில்லை. மாணவர்கள் படிப்பதை பொறுத்தும், திறமையை வளர்த்துக் கொள்வதைப் பொறுத்து தான் வேலை வாய்ப்பு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ளது.
அரசுக் கல்லூரி:பிஎஸ்சி நர்சிங் (B.Sc Nursing) பட்டப்படிப்பில் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி, கடலூர் ஆகிய 6 மருத்துவக் கல்லூரியில் 350 இடங்கள் உள்ளது. பி-பார்ம் 4 ஆண்டு கால பட்டப்படிப்பு சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதேபோன்று, அரசு மருத்துவக் கல்லூரியில் 19 படிப்புகளில் சிறப்பாக நடத்தப்படுகிறது.
ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு:தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 226 கல்லூரியில் 9 ஆயிரத்து 310 இடங்களும், பிபார்ம் 92 கல்லூரியில் 5 ஆயிரத்து 680 இடங்களும், பிபிடி 51 கல்லூரியில் 2 ஆயிரத்து 59 இடங்களும், பிஓடி 9 கல்லூரியில் 397 இடங்கள் என 20 ஆயிரம் இடங்கள் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
கல்விக் கட்டணம்: அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். தனியார் சுயநிதிக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பிபார்ம் படிப்பிற்கு ரூ.43 ஆயிரமும், பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கு ரூ.45 ஆயிரம், பிபிடி, பிஓடி படிப்பிற்கு ரூ.33 ஆயிரம் ஆண்டிற்கு கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்ப பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 7 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம்! - Paramedical Courses Admission 2024