சென்னை: "தமிழக வெற்றிக் கழகம் " என்ற பெயரில் தமது கட்சியை அறிவித்துள்ள நடிகர் விஜய் , தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து தமது பார்வை மற்றும் செயல் திட்டத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கடந்த 25ம் தேதி சென்னையில் நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் தலைமைச் செயலக நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வரவிருக்கும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என விஜய் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், அரசியல் பயணம் துவங்கும் என விஜய் கூறியுள்ளார்.
இடைப்பட்ட காலத்தில், தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும் என விஜயின் அறிக்கை கூறுகிறது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் தங்களின் ஆதரவு இல்லை என்பதும், பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், விஜய் கூறியுள்ளார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவெடுத்துள்ள விஜய் வரும் 2 ஆண்டுகளை அதற்கான அடித்தளம் அமைக்கும் பணிகளில் பயன்படுத்தவும் முடிவெடுத்துள்ளதையே இந்த அறிக்கை காட்டுகிறது.
இதையும் படிங்க: 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் களமிறங்கிய விஜய்.. கொள்கை, திட்டம் என்ன?