சென்னை:தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆகப் பெயர் எடுத்தவர், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொண்ட குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் சென்னை பிரபல ரவுடியாக வலம் வந்து கொண்டு இருந்த அயோத்திகுப்பம் வீரமணி என்கவுண்டரில் முக்கிய பங்கு வகித்தார்.
இதேபோல் கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரவுடிகளை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரவுடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவணக் காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியிலிருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வெள்ளத்துரை பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென நேற்று மாலை அவரை பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இதற்கான உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரத்தை தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தன் மீது எந்த தவறும் இல்லை என ஏடிஜிபி வெள்ளத்துரை தரப்பில் கூறப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் ஏன்?கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ரவுடி ராமு என்கிற கொக்கி குமார் என்பவர் காவல் நிலைய கஸ்டடியில் உயிரிழந்தது சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் வெள்ளதுரைக்கும் சம்பந்தம் இருப்பதாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.