கோயம்புத்தூர்:நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது. மருத்துவ குணம் உள்ள பூண்டிற்கு உணவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு கொண்ட பூண்டு விலை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
இதன் காரணமாக இல்லத்தரசிகள் கவலை அடைந்தாலும், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக பூண்டு விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வந்த நிலையில், விலை உயர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை மற்றும் குறைந்த அளவில் பயிரிடப்பட்டதால் விளைச்சல் குறைவாக இருந்தாலும் விலை அதிகமாக உள்ளதால் ஓரளவு லாபம் ஈட்டமுடியும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
வியாபாரி மற்றும் விவசாயி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பூண்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. அதேநேரத்தில் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் விளையும் மருத்துவ குணம் கொண்ட பூண்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பூண்டு விலை உயர்ந்துள்ள நிலையில் நீலகிரி பூண்டிற்கு கூடுதல் விலை கிடைக்கிறது.
இதில், நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பூண்டுகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பூண்டு ஏல விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி நேற்று(அக்.20) நீலகிரி மாவட்டம் கூடலூர், கேத்தி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, விவசாயிகள் பூண்டு விற்பனைக்கு கொண்டு வந்தனர். 5 மண்டிகளில் அதிகபட்சமாக பூண்டு கிலோ ரூ.550க்கு விற்பனை ஆனது.
இது குறித்து வியாபாரி சாமுவேல் கூறுகையில்,"இந்த ஆண்டு பூண்டு விலை 300 ரூபாய் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் 600 ரூபாய் வரை விற்பனை ஆகியுள்ளது. ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 டன் பூண்டு விளைய வேண்டும். ஆனால் 2.5 முதல் 4 டன் மட்டுமே விளைசச்ல் ஆகியுள்ளது. இதற்கு காரணம் போதிய மழையின்மை ஆகும். வட மாநில பூண்டுகளை விட நீலகிரி பூண்டுகள் சுவையும், தரமும் கூடுதலாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் இதை வாங்கி செல்கின்றனர்" என்றார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், "பூண்டு அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.550 ரூபாய்க்கும் குறைந்த பட்சமாக 300க்கும் ஏலம் போனது. கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.600க்கு அதிகபட்சமாக ஏலம் போனது. அதற்கு முன் ரூ.650க்கு போனது.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து பூண்டு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. விளைச்சல் குறைந்து வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவ குணம் உள்ள ஊட்டி பூண்டுகளுக்கு வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளா,கர்நாடக, மற்றும் வட மாநிலங்கள், வெள்ளைப் பூண்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
மார்க்கெட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வெள்ளைப் பூண்டு கமிஷன் மண்டிகள் உள்ளன. மார்க்கெட்டில் உள்ள வெள்ளைப் பூண்டு மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து 40 கிலோ கொண்ட 1000 மூட்டைகள் வந்தது. இந்த வாரம் வட மாநிலங்களிலிருந்து விதைப்பூண்டு வாங்குவதற்காக விவசாயிகள் வந்ததின் காரணமாக வெள்ளைப் பூண்டு விலை உயர்ந்து இருந்தது, வரும் வாரங்களில் பூண்டு விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும்" தெரிவித்தனர்.