சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளான பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வினை, தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்தி வருகிறது. அதன்படி, 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வினை நடத்துவதற்கு, தொழில்நுட்ப கல்வி ஆணையர் தலைவராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துணைத் தலைவராகவும், மாணவர் சேர்க்கைக் குழுவின் செயலாளராக கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக்கல்லூரியின் பேராசிரியர் புருஷோத்தமன் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் முதல் குழுவின் கூட்டம், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி முடிவடைந்த நிலையில், முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுத் துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன்பின்னர், பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் மூலமான விண்ணப்பப்பதிவு துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வினை, மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தரமான கல்லூரியில் சேர்வதற்கும், கடந்தாண்டுகளில் மாணவர்கள் சேர்ந்த எண்ணிக்கை குறித்த விவரங்களை கல்லூரி வாரியாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.