கள்ளக்குறிச்சி:எங்கு திரும்பினாலும் மரண ஓலம்! கள்ளக்குறிச்சி நகரின் பேருந்து நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள கருணாபுரத்தின் தற்போதைய நிலை இதுதான். ஒவ்வொரு தெருவையும் கடந்து செல்லும் போதும், பெண்கள் ஓலமிட்டு அழுவது காதுகளில் ஒலிக்கிறது. நகரில் நீதிமன்றம், காவல் நிலையம், மாவட்ட ஆட்சியரகம் என அரசு அலுவலகங்கள் அருகாமையில் தான் தொடர்ச்சியாக கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கிறது.
37 வயது கூலித் தொழிலாளியான பரமசிவன் என்பவரும் உயிரிழந்தவர்களில் ஒருவர் அவரது சகோதரரான உதயகுமார் என்பவர் ஈடிவி பாரத் நிருபரிடம் பேசும் போது, "எங்கள் அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை, கூலி வேலை செய்யும் அவர் தினமும் வேலை முடிந்ததும் இங்கு விற்கப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிப்பார். நேற்று (19.06.2024) பகலில் அவர் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். ஆனால் இரவு 8.30 மணியளவில் தான், வயிறு வலி தாங்க முடியாமல் அலறியதால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்" என்றார். பரமசிவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார்.
கருணாபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி நள்ளிரவில் அலறியடித்தபடி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார், ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் நாங்கள். நாள்தோறும் உழைத்தால் தான் எங்கள் குடும்பம் நடக்கும். நான் பள்ளியில் வேலைக்கு போயிருந்தேன், நான் வருவதற்குள் என் கணவர் சாராயத்தைக் குடித்திருக்கிறார் என்றார். ராம கிருஷ்ணனின் மகன் பேசும் போது, எங்கள் தந்தை குடிக்கவில்லை எனக் கூறினார். ஆனால் நள்ளிரவில் தான் அவருக்கு கண் தெரியாமல் போய்விட்டது. எனவே மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் என்றார்.
ஒரே குடும்பத்தில் இருவர் மரணம்:நமது நிருபர் மருத்துவமனையில் இருந்த போதே ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட 60 வயதான கருப்பன் என்பவர் தான் 2 லிட்டர் சாராயம் குடித்ததாக கூறுகிறார். மருத்துவமனை வளாகத்தில் அழுதுபுலம்பிக் கொண்டிருந்த லட்சுமி என்பவரிடம் பேசிய போது தனது தாய் கலா மற்றும் தந்தை ரவி என இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கேட்டு தான் வந்ததாகவும், மருத்துவமனை முழுவதும் தேடியலைந்தும் தன்னால் கண்டு பிடிக்கவில்லை என கூறினார். இறுதியாக தனது பெற்றோரின் புகைப்படத்தைக் காண்பித்து இருவரும் மரணமடைந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்கள் என லட்சுமி கூறினார்.
கள்ளச்சாராயம் குடித்தோரில் பெரும்பாலானோர் பயந்து போய் சாராயம் குடித்ததை மறைத்துள்ளனர். வயிற்றுவலி தீவிரமான உடன் தான் மருத்துவமனைக்கு உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் முதலில் மரணமடைந்தது கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தான். இவர் 18ம் தேதி மாலையில் சாராயம் குடித்துள்ளார். பின்னர் 19ம் தேதி காலையும் சாராயம் குடித்ததாகவும், பின்னர் உடனே அவர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது மரணத்தின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், தாங்களும் சாராயம் குடித்ததால் அதிர்ச்சியடைந்து மருத்துமனைக்குச் சென்றதாகவும், தற்போது உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் சுரேஷின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தான் என்கிறார், அவரது உறவினர். மரணமடைந்த அத்தனை பேரின் உடல்களையும் கோமுகி நதிக்கரையில் தகனம் செய்ய ஒரே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.