சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊதியத்தை கால தாமதமின்றி மாதாமாதம் வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் மாதம் 21 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் சாந்தி, "தமிழகம் முழுவதும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப்பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு தினக்கூலியாக 200, 250, 300 ரூபாய் என்ற அடிப்படையில் சம்பளம் பெறுகிறார்கள்.
மேலும், அவர்களின் மாத சம்பளத்தில் 4 நாட்கள் சம்பளத்தை அவர்களது உயர் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க கட்டாயப்படுத்தவதாக தெரிவிக்கின்றனர். அப்படி லஞ்சம் கொடுத்தால் தான் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும் என அவர்கள் மிரட்டுவதாகவும் கூறுகின்றனர்.
அவர்கள் துறை சார்ந்த பணியைச் செய்ய விடாமல் அரசு கட்டடத்திற்கு பெயிண்ட் அடிக்க, ஒட்டடை அடிக்க வைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல, எந்த கட்சி கவுன்சிலராக இருந்தாலும் அவர்களது வீட்டு வேலையைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 38 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள்.
தமிழக அரசு சுகாதாரத்துறைக்கு, நோய்த்தடுப்பு துறைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகையால், இதற்கு கவனம் செலுத்தி இதை சரி செய்து தர வேண்டும் எனவும், டிபிசி பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அளவு கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், ரூபாய் 21 ஆயிரம் மாத ஊதியமாக குறைந்தபட்சம் கொடுக்க வேண்டும், இவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். இந்த 38 ஆயிரம் பணியாளர்களுக்கும் மருத்துவத்துறை மூலம் ஊதியம் தர வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக உள்ளது" என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்
ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:TNUHDB வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு!