திருப்பத்தூர்:திருப்பத்தூரில் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு மாடி கொண்ட அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை GMS கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் பணியாற்றி வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் அபுதாகிர்(19) என்ற வாலிபர். இவர் ஆறாவது அடுக்கு மாடியில் கட்டடத்திற்கு பூசு வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, கட்டுமானப் பணியில் இருந்த வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, 7 மாடி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணம் இல்லாமலும், கட்டடத்தில் பாதுகாப்பு வலை இல்லாமலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:காரில் வந்து ஆடுகளை திருடிய மர்ம கும்பல்.. நாகையில் வைரலாகும் சிசிடிவி!