சென்னை: வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடர்பாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் பலரின் உடல்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என தேடப்பட்டு வருகிறது. இது போன்ற சூழலில், கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மக்கள், தங்களது வாழ்வாதாரத்தையும் உடைமைகளையும் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏன் நிலச்சரிவு ஏற்பட்டது? நிலச்சரிவு ஏற்படும் அளவிற்கு மழைப்பொழிவு அதிகமாக காரணம் என்ன? என்பது குறித்த பல்வேறு தகவல்களை வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த், ஈடிவி பாரத் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறிய தகவல்கள் பின்வருமாறு, "நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் இடமானது மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு திசையில் இருக்கிறது. கேரம்பாடி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழை வயநாடு பகுதியிலும் பெய்ததால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் மழை நீரானது விரைவாக கீழே இறங்கியதால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கக்கூடும்.
அதேபோல, அச்சன் கோயில் பகுதியில் உள்ள ஆற்றில் தண்ணீர் அளவு அதிகமாக இருப்பதால் மழை பெய்யும் போது சில நேரங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருந்துள்ளது. தெற்கு கர்நாடகாவிலிருந்து மத்திய கேரளா மற்றும் வால்பாறை வரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் கடந்த வாரங்களில் 30 செ.மீ அளவில் மழை பெய்திருக்கிறது.
ஆனால், வானிலை மையம் கணித்ததை விட அதிக அளவு மழை பெய்ததால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த அதிக மழைப்பொழிவுக்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் ஆகிய இரு கடல் பகுதியும் வெப்பம் மிகுந்த கடல் பகுதியாக இருப்பதாகும். ஏனென்றால், அந்த பகுதிகளில் ஈரப்பதம் இருப்பதால் அடிக்கடி அதிக அளவு மழை பெய்யும் சூழல் உள்ளது. மேலும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகமாக நடைபெற வாய்ப்புகளும் உள்ளது. இதனாலேயே, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கக்கூடிய பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவும் ஏற்படுகிறது.