சென்னை:தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கரையை ஒட்டிய புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே நாளை காலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழ்நாடு மாவட்டங்களில் நேற்று மிக கனமழையும், இன்று லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. காற்று பிரிதல் வட தமிழகம் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகர்ந்துள்ளது.
அதனால் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்துக்கு முழுவதுமாக மழை நீங்கவில்லை. தமிழகத்திற்கான மழை மிதமாகவும், சற்று கூடுதலாகவும் இருக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரப் பகுதியில் கரையைக் கடக்கும் வரை மழைக்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்.