சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த வாரம் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் மட்டுமே திரையரங்குகளில் வெளியானது. கங்குவா வெளியானது முதல் ரசிகர்கள் பலர் எதிர்மறை விமர்சனங்களை அளித்து வந்த நிலையில், திரைப் பிரபலங்கள் பலர் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் அளித்தனர். இந்நிலையில் இந்த வாரம் மலையாள டப்பிங் படங்கள் உட்பட 7 படங்கள் வெளியாகியுள்ளது.
ஜாலியோ ஜிம்கானா: சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’ஜாலியோ ஜிம்கானா’. காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இருந்து வெளியான ’போலீஸ்காரனை கட்டிக்கிட்டா’ என்ற பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நிறங்கள் மூன்று: ’துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார் நடித்துள்ள படம் நிறங்கள் மூன்று. ஹைப்பர் லிங்க் வகையில் உருவாகியுள்ள இப்படம் த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எமக்கு தொழில் ரொமான்ஸ்: பாலாஜி கேசவன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், அவந்திகா நடித்துள்ள திரைப்படம் ’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இப்படத்தை இயக்குநர் திருமலை தயாரித்துள்ளார். காமெடி கலந்த காதல் படமாக இது உருவாகியுள்ளது. நீண்ட நாட்களாக வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்ட இப்படம் இன்று ஒருவழியாக வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சி.எம் முதல் சினிமா பிரபலங்கள் வரை.. களைகட்டிய மு.க.முத்துவின் பேத்தி திருமணம்..!
பராரி: எழில் பெரியவேடி இயக்கத்தில் அரிசங்கர் தயாரித்து நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’பராரி’. வேலைக்காக புலம்பெயரும் மக்களின் வழியை பதிவு செய்துள்ள இப்படம் விருதுகளையும் பெற்றுள்ளது. ஆழமான கதைக்களத்தை கொண்டுள்ள பராரி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதே போல் ’குப்பன்’, மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோஜூ ஜார்ஜின் ’பணி’ , ’ஜீப்ரா’ உள்ளிட்ட டப்பிங் படங்களும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்