சேலம்:சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (பிப்.08) அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவின் முன்னணி தலைவர்கள் பங்கேற்று அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் உறுப்பினர்களுக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமை உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் நியமித்த ஒரே கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்தக் கட்சியில் மட்டுமே அடிப்படை தொண்டனும் முதல்வர் ஆகலாம் என்ற எடுத்துக்காட்டு உள்ளது. அந்த எடுத்துக்காட்டாக நானே உள்ளேன். கீழே அமர்ந்து மேடைப்பேச்சைக் கேட்டு படிப்படியாக வளர்ந்து தற்போது அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக வரக்கூடிய அளவிற்கு நமது கட்சியில் வாய்ப்பு உள்ளது.
உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி பதவி வழங்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக.பணத்தை நம்பியே ஆட்சி நடத்தி வருகின்றனர் தற்போது உள்ள ஆளுங்கட்சியினர். மக்களை நம்பியே கட்சி நடத்தி வருவது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பல்வேறு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளது என்று கூறப்பட்ட நிலையில், இங்கு செய்ய வேண்டிய ஒப்பந்தத்தை வெளிநாடு சென்று ஒப்பந்தத்தை கையெழுத்திட என்ன காரணம். இந்த விஷயம் தொடர்பாக முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும். மக்கள் பிரச்சினையை கொண்டு சென்று நாடாளுமன்றத்தில் பேசி மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்ப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை.
பொதுமக்கள் எந்த நோக்கத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதே அவர்களின் கடமை. தேசிய அளவில் உள்ள கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் நமது பார்வை தேசிய அளவில் அமைந்து விடும். நமது மாநில பிரச்சினைகளை தேசிய கட்சிகள் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள். அதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு மக்களின் உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர புயல், வெள்ளம், வறட்சி, போன்ற காலங்களில் மக்கள் பெரும் துன்பங்களை யார் நிவர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு தான் அதிமுகஆதரவு.பிரச்சினையின் அடிப்படையிலேயே அவர்களுக்கு ஆதரவு தருவோம். ஓட்டு போட்டு மக்கள் தமிழ்நாடு எம் பி களை தேர்ந்தெடுப்பது தமிழ்நாட்டு மக்கள்.
ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரச்சனை என்று வரும்போது சொன்னால் கூட காது கொடுத்து கேட்க , பிரச்சனைகளை தீர்க்க மத்தியில் யாருமில்லை. இதுதான் இன்றைய தேசிய அரசியலின் நிலை. ஆகவே தான் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து தனியாக பிரிந்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. நமது உரிமையை பாதுகாப்பதற்காக நாம் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டோம்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதுதான் நமது தலைவர்கள் வகுத்து தந்த பாதை. அதில் தான் தற்போது பயணிக்கிறோம். தேசிய அளவில், இந்தியா 'கூட்டணி அமைத்துக் கொண்டு எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று திமுக நினைத்தார்கள். காரில் பயணம் செய்யும்போது கார் சக்கரங்கள் ஒவ்வொரு டயராக கழண்டு செல்வது போல நிலைமை தான் தற்போது இந்தியா கூட்டணிக்கு உள்ளது
அவ்வளவு ராசியான கட்சி தான் திமுக கட்சி. திமுகவுடன் கூட்டணி வைத்திருந்ததால் காங்கிரஸ் கட்சி அடி பாதாளத்துக்கு சென்று விட்டது. திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காமல் போய்விட்டது" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையும் படிங்க:“சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியே”- கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம்!