தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வறண்டது வீராணம் ஏரி.. சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு

Veeranam Lake: நீர்வரத்து இல்லாததால் வீராணம் ஏரி வறண்டதால், ஏரியில் இருந்து சென்னை மாவட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்த குடிநீர் இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வறண்டது வீராணம் ஏரி
சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 3:34 PM IST

கடலூர்: ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் தண்ணீரின்றி குடுங்களுடன் போராடும் நிலை ஏற்படுவதை பார்த்து வருகிறோம். இதில், சென்னை மாவட்ட பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை கூடிவரும் நிலையில், அவர்களுக்கான குடிநீர் தட்டுப்பாடும் பெருகி வருகிறது.

இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்னரே, சென்னை மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி வறண்டு, ஏரியின் கொள்ளளவு 38.85 அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி இன்று (பிப்.28) முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, காவேரி டெல்டா பாசன விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. இந்த ஏரியைச் சுற்றி சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பாட்டில் உள்ளன. மொத்த கொள்ளளவாக 47.50 அடியைக் கொண்டுள்ள வீராணம் ஏரி, தற்போது நீர்வரத்து இல்லாததால், நாளுக்கு நாள் நீர்மட்டம் சரிந்து, இன்று ஏரியின் கொள்ளளவு 38.85 அடியாக குறைந்துள்ளது.

இதையடுத்து, இந்த ஏரியில் இருந்து சென்னை மாவட்ட பகுதிகளுக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், நீர்மட்டம் முற்றிலும் குறைந்ததன் காரணமாக, ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், நெய்வேலியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், வாலாஜா ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பும் பணிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வீராணம் ஏரி 38.85 அடி உள்ளதாக கணக்கு கூறப்பட்டாலும், ஏரி தண்ணீரின்றி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது.

ஏரியை முழுமையாக தூர்வாரினால், சென்னை மக்களுக்கான குடிநீருக்கு அனுப்பும் பணி பாதிக்காமல் இருக்கும் எனவும், மேலும் விவசாயப் பணிகளுக்கும் உரிய நேரத்தில் நடைபெறும் எனவும் பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில், ஏரியை முழுமையாக தூர்வாருமாறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கும்பகோணம் அரசுப் பள்ளியில் புதிய கல்வி முறையில் உலக சாதனை படைத்த 3ஆம் வகுப்பு மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details