மதுரை: உலகப் புகழ் பெற்ற சித்திரை பெருந்திருவிழாவில், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும். இந்த விழாக்களைக் காண மதுரையிலிருந்து மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.
அதேபோல், பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். சித்திரை வெயில் உச்சியில் இருக்கும் தருணத்தில், கூட்ட நெரிசலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முண்டியடித்துக் கொள்வர். அத்தகைய தருணத்தில் பல பக்தர்கள் மூச்சு விடச் சிரமப்பட்டு மயங்கி விழுவார்கள். உச்சி வெயிலிலும், கூட்ட நெரிசலிலும், காவல்துறையினரும் தங்களது பாதுகாப்புப் பணியைச் சிரமத்துடன் மேற்கொள்வார்கள்.
இவர்கள் அனைவரும் ஆசுவாசப்படும் விதமாக 7 அடி உயர விசிறியைக் கொண்டு சேவகர்கள் விசிறி வீசி வருவார்கள். சுமார் 30க்கும் மேற்பட்டோர் இந்த சேவையைப் பாரம்பரியமாகச் செய்து வருகின்றனர். சமீப காலமாக இவர்களைத் தேர்த் திருவிழாவிலும், வைகை ஆற்றிலும் அனுமதிக்காமல் தடை செய்வதாகப் புகார் கூறி விசிறி சேவா சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.
இதுகுறித்து, விசிறி சேவா சங்கத்தின் பொருளாளர் முத்து ராமன் கூறுகையில், "நாங்கள் 10 பைசா வாங்காமல் இதைப் பாரம்பரியமாகச் சேவை நோக்குடன் செய்து வருகிறோம். வைகை ஆற்றில் கள்ளழகரை வீரராகவப்பெருமாள் சுற்றி வரும்போது தாங்களும் சுற்றி வருவது பாரம்பரியம். ஆனால், சமீப காலமாக எங்களை ஆற்றுக்குள் அனுமதிக்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.