விருதுநகர்: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று விருதுநகரில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காமராஜர் ஆசியுடன் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணியை தொடங்குகிறேன் என தெரிவித்தார். அதன் பின்னர் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளது குறித்து கேட்டதற்கு, சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் போல் திரும்பவும் கொண்டு போய் பேட்டிங் கொடுங்கள் என்று சொல்ல முடியாது. தேர்தல் கமிஷன் நடத்தி, நேர்மையான அதிகாரிகளால் வாக்குகள் எண்ணப்பட்டது. மறுவாக்கு எண்ணிக்கை கோருவது சிறுபிள்ளைத்தனமானது.
என்னைப் பொறுத்தவரை மூவரும் தேர்தல் கமிஷனை பார்த்திருக்க மாட்டார்கள். தேர்தல் கமிஷனின் அதிகாரிகளே மனுவை வாங்கி இருக்க மாட்டார்கள். வெறும் விளம்பரத்திற்காக தொடர்ந்து இவ்வாறு செய்து வருகிறார்கள். தேமுதிகவினர் பொய் பிரச்சாரத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று டெல்லியில் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. விருதுநகர் மக்களவைத் தொகுதி மக்களின் குரலாக எனது குரல் டெல்லியில் ஒலிக்கும். குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, ஒரு ஓட்டில் வெற்றி பெற்றாலும் அது வெற்றி வெற்றிதான். தேர்தல் கூட்டணி என்பது வித்தியாசமானது.