தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பட்டாசுத் தொழிலை அழிக்கும் மறைமுக நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கக் கூடாது”- எம்பி மாணிக்கம் தாகூர்! - MP Manickam Tagore - MP MANICKAM TAGORE

MP Manickam Tagore on Firecracker law: பட்டாசு தொழிலுக்கான வெடிபொருள் சட்டத்தை மாற்றுவதற்கு முன்பாக மத்திய அரசு பட்டாசுத் தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள், பட்டாசு விற்பனையாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

எம்பி மாணிக்கம் தாகூர்
எம்பி மாணிக்கம் தாகூர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 9:36 PM IST

விருதுநகர்:விருதுநகர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.25 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டப் பணிகள் குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், “விருதுநகர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் முதல்கட்டமாக, முகப்புத் தோற்றம் அழகுபடுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகப்பு பகுதி, பார்சல் அலுவலகம், வாகன காப்பகம் உள்ளிட்ட பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை வரும் டிசம்பர் மாதம் முடிவடையும். மேலும், செப்டம்பரில் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்படும். அதில் மேல் தளம், லிப்ட், நடைமேடை விரிவாக்கம் போன்ற வசதிகள் அமையும். தற்போது முதல் கட்டப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. நுழைவாயில் பணிகள் முடிந்துள்ளன. மீண்டும் டிசம்பர் மாதம் ஆய்வு மேற்கொள்வோம். அதற்குள் முதல் கட்டப் பணிகள் முடிக்கப்படும் என நம்புகிறோம். அதன் பின்னர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி வலிமை இழந்திருக்கிறார். இது அவரது நடவடிக்கையும், பேச்சிலும் தெரிகிறது. மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனக்கு நடிப்பில்தான் விருப்பம் உள்ளதாக முகத்திற்கு நேராக கூறியுள்ளார். தைரியம் இல்லாத மோடி இதை ஏற்றுக்கொண்டு அவரை நீக்கவில்லை. பயந்து நிற்கிறார்” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “பட்டாசுக்கான வெடிபொருள் சட்டம் 1800-களில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை மாற்றுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது முதல்கட்டமாக ஆய்வில் உள்ளது. வரைவுச் சட்டம் பல வகையில் பரிமாற்றம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக பட்டாசு தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள், பட்டாசு விற்பனையாளர்களை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். இந்தச் சட்டம் பட்டாசு தொழிலாளர்களுக்கு எதிராக அமைந்தால் பட்டாசு தொழிலை காக்க வழியே இல்லை. எனவே, இச்சட்டம் முழு வடிவமம் பெறுவதற்குள் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசு எந்த வகையிலும் பட்டாசு தொழிலை அழிக்கும் மறைமுக நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வின்போது சீனிவாசன் எம்எல்ஏ, ரயில்வே முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், முதுநிலை வணிக மேலாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details