விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 10ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி உத்தரவின்பேரில், தோ்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், செஞ்சி வட்டாட்சியர் துரைசெல்வம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிரே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 27 கிலோ எடையிலான 508 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது.
தொடா்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி வட்டாட்சியர் ஜி.யுவராஜியிடம் ஒப்படைத்தனர். பின்னர், இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், தனியார் நிறுவனம் மூலம் கொலுசுகள், குருமாத்துகள் செய்து விழுப்புரத்தில் இருந்து செஞ்சியில் உள்ள கடைகளுக்கு யுவராஜ் என்பவர் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
மேலும், நேற்று ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பழனி, ''விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுத்திடும் பொருட்டும், கண்காணிக்கும் வகையிலும் மூன்று பறக்கும் படைக் குழுக்கள், மூன்று நிலை கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணம், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய பொருள்களை எடுத்துச் செல்லும் அனைத்து நபர்களும், அவர்கள் எடுத்துச் செல்லும் ரொக்கப் பணம், பொருள்களுக்கு உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவது வாகனத் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு நிகழ்வும் கணினி மூலமாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு முறைகேடு புகார்: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மக்கள் கல்விக் கூட்டியக்கம் வலியுறுத்தல்!