ஈரோடு : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் ஆசனூரில் துணை மின்நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஆசனூர் ஸ்ரீ கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான நில அளவீடு பணியை வருவாய்த்துறையினருடன் இணைந்து மின்வாரியம் தொடங்கியது.
இதற்கு ஆசனூர், கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடம் ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கிராமமக்கள் மின்வாரியத்தை கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே இன்று ஆசனூர் கும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினர் துணை மின் நிலையம் அமைப்பதற்கான நிலஅளவை பணிக்காக, ஜேசிபி வரவழைக்கப்பட்டு நிலத்தை சுத்தம் செய்தனர்.
இதையும் படிங்க :“தமிழகத்தில் பி.எச்டி தரம் திருப்திகரமாக இல்லை”.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - Governor RN Ravi
அப்போது கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலத்தை சுத்தம் செய்யவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமமக்கள் எதிர்ப்பு காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
நில அளவைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களை போலீசார் அப்புறபடுத்தியதால் போலீசாருக்கும் கிராமமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.