வேலூர்:காட்பாடியில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் விற்பது, வாங்குவது, பாகப்பிரிவினை ஆகியவற்றுக்கு பத்திரப்பதிவுகள், திருமணப் பதிவு என தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தின் சார் பதிவாளராக (பொறுப்பு) நித்தியானந்தம் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், பத்திரப்பதிவு செய்ய அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையிருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில், நேற்று (ஜூன் 19) மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து, உள்ளே இருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் என அனைவரும் வெளியே செல்ல விடாமல் கதவை சாத்தியுள்ளனர். மேலும், வெளியிலிருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக வெளியிலிருந்த கேட் மூடப்பட்டுள்ளது.
பின்னர் அலுவலகத்திற்குள்ளே வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சங்கர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், அதிரடியாக சோதனை செய்து அங்கிருந்த அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் காட்பாடி பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் சோதனைக்குச் சென்ற போலீசார், சோதனை செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.