ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழை பெய்யாத காரணத்தால், கடும் வறட்சி நிலவியது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி குடியிருப்புப் பகுதிக்கு நுழையும் சம்பவங்கள் அதிகரித்தன. இந்த நிலையில், தாளவாடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானை ஒன்று, மாமரத்தின் மீது ஏறி, தும்பிக்கையால் மாங்காய் பறிக்க முயன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் யானைகள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. ஆகையால், பயிர்களின் பாதுகாப்பிற்காக விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, அப்பகுதியில் உள்ள தொட்டத்தாய் அம்மன் கோயில் அருகே இருந்த நுழைந்துள்ளது. இதைக் கண்ட விவசாயிகள் அச்சமடைந்து இந்த யானையை விரட்ட முயன்றுள்ளனர். அப்போது, அந்த காட்டு யானை தோட்டத்திலிருந்த மாமரத்தின் மீது ஏறி தனது தும்பிக்கையால் மாங்காய்களை பறிக்க முயன்றுள்ளது.