தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அந்த சத்தம்'.. அடுத்த நொடியே பயங்கரம்.. திருப்பூர் வெடி விபத்து எப்படி நடந்தது? - TIRUPUR BLAST EXPERIENCE

திருப்பூர் வெடி விபத்து எப்படி நடந்தது மற்றும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

திருப்பூர் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
திருப்பூர் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 7:39 PM IST

திருப்பூர்: பாண்டியன் நகர் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிரஞ்சனா என்ற 6 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

வெடி விபத்து எப்படி நடந்தது; '' திடீரென ஒரு சத்தம் கேட்டுச்சு சார்.. அடுத்த நொடியே நாங்க இருக்கும் பகுதி புகை மூட்டமா மாறிடுச்சு.. ஓடுகள் எல்லாம் சிதறி மேலே விழுந்ததுல தலையில அடிபட்டு நிலை குலைஞ்சி போயிட்டோம்.. இத்தனை வருஷமா அங்க இருக்கோம்.. வீட்டு பக்கத்துலயே நாட்டு வெடி தயாரிக்கிறாங்கனு இப்போதான் எங்களுக்கு தெரியுது'' என்று வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்து பாண்டியன் நகரில் உள்ள கார்த்தி என்பவருக்குச் சொந்தமான வீட்டில்தான் நடந்துள்ளது. கார்த்தி இந்த வீட்டில் கார்த்தி கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (அக்.08) கார்த்தியின் வீட்டில் திடீரென அதிக சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில், இன்று 6 வயது சிறுமியும் பரிதாபமாக இறந்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டிலிருந்து வெளியேறுகிறதா சாம்சங்? போராட்டங்களுக்கு அரசு சொல்லும் தீர்வு!

வெடி விபத்து நடந்த இடத்தில் மளிகை கடை நடத்தி வருபவர், '' கடையே போச்சு சார்.. ஒரு சின்ன டவுட் கூட வராத அளவுக்கு வீட்டு பக்கத்துலயே வெடி மருந்து தயாரித்து வந்துருக்காங்க.. அந்த பகுதியில பெரிய ஸ்கிரீன் மாட்டி இருக்கும்.. உள்ளே யாரையும் அனுமதிக்கவும் மாட்டாங்க.. எங்களுக்கு அந்த பகுதியில போக அவசியம் இல்லாததுனால எங்களுக்கு இது பத்தி எதுவுமே தெரியாம இருந்துருக்கு.. பொழப்பே போச்சு.. என் மனைவிக்கு தலையில தையல் போட்டு இருக்கு.. தொடர்ந்து அவங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருது.. சேதமான மளிகை கடைக்கு ஏதாவது அரசு பண்ணி தந்தா போதும்'' என்று வேதனையோடு கூறினார்.

இதற்கிடையே, வீட்டின் உரிமையாளர் கார்த்திக் மற்றும் வெடி பொருட்களை சேகரித்து வைத்த சரவணகுமார் என்ற இருவரை திருமுருகன் பூண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ராமசாமி சம்பூர்ணம் என்ற இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூரில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இது குறித்த தகவல் சுற்றுவட்டாரங்களில் பரவிய நிலையில், ஏராளமானோர் இந்த பகுதியை பார்வையிட குவிந்து வருவதால் தொடர்ந்து இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்ளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details