சென்னை:கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்களை 15 மாணவர்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இதனால் நடப்பாண்டில் கால்நடை மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கட்ஆப் அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் 80 இடங்களும் , தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளன.
உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்)40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் உள்ளன. இதில் கடந்த ஆண்டைப் போலவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.