சென்னை:பிரதமர் மோடி குறித்து வேல்முருகன் எம்எல்ஏ பேசிய சில வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய திருத்தப்பட்ட வரைவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் முன்மொழிந்த இத்தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் அவையில் பேசினர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில், பிரதமர் மோடியை சில சர்வாதிகார தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசினார்.
இதையடுத்து பேசிய பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்,'யுஜிசி குறித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பேசும் வார்த்தை முக்கியம். நாட்டின் பிரதமரை இப்படி சர்வாதிகார தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசலாமா?
நீங்கள்(சபாநாயகர்) கேட்பீர்கள் என நினைத்தேன்; கேட்டு கேட்காமல் இருக்கிறீர்கள். யுஜிசி திருத்தம் குறித்து பேசப்படும்போது வார்த்தைகளை எப்படி பேச வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரம் என்றெல்லாம் பேசுவதை நீங்கள் கண்டிப்பீர்கள் என நினைத்தேன்.மாநில உரிமை பறிக்கும் வகையில் இருந்தால் சுட்டிக்காட்டலாம் தவறு இல்லை. ஆனால் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும்." என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு ,"யுஜிசி திணிப்பதை தான் அவர்(வேல்முருகன்) கூறினார். அன்பார்லிமென்ட் வார்த்தை ஏதும் பயன்படுத்த வில்லை" என்றார்.