வேலூர்: மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா இன்று (மார்ச் 9) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இத்திருவிழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு, காட்பாடி, வேலப்பாடி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
ஊர்வலத்தின் பின்னால், பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டுச் சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாகச் சென்றனர்.
ஊர்வலத்தில் மேள தாளம் முழங்க இளைஞர்களும், சிறுவர்களும் உடன் ஆடிப்பாடிச் சென்றனர். ஆண்கள் பலர் பெண்கள் போன்று வேடம் அணிந்தும், சிலர் எலும்புத் துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்தபடியும் ஊர்வலத்தில் சென்றனர்.
மயான கொள்ளை ஊர்வலம், வேலூர் ராஜா திரையரங்கம் தொடங்கி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அதேபோல், காட்பாடியில் தொடங்கி, விருதம்பட்டு வழியாக புதிய பேருந்து நிலையத்தில் வந்தடைந்தது. வீதிகள் வழியாகச் சென்று ஆங்காங்கே உள்ள மயானத்தை அடைந்தது.