தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்திய ஈபிஎஸ் - கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

TN CM MK Stalin criticize eps: அதிமுக ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி எனவும், மோடிக்கும் – அமித்ஷாவுக்கும் தன்னுடைய விசுவாசத்தை வெளிக்காட்டினார் எனவும், பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடினார்.

TN CM MK Stalin criticize eps
TN CM MK Stalin criticize eps

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 11:00 PM IST

வேலூர்: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்.2) வேலூர், நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர், "சிறுபான்மை மக்களின் உண்மையான காவலனாக எப்போதும் திமுகதான் இருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கும் திமுகவுக்குமான உறவு என்பது இன்றைக்கு - நேற்று ஏற்பட்டது இல்லை. பேரறிஞர் அண்ணாவிடம் கருணாநிதியை இணைத்தது, திருவாரூரில் நடந்த மிலாடி நபி விழாதான். தலைவர் கருணாநிதிக்கு உற்ற பள்ளித்தோழர் அசன் அப்துல்காதர்.

முரசொலியை முதலில் அச்சிட்டுக் கொடுத்தவர் கருணை ஜமால். அனல் தெறிக்கும் வசனங்கள் திரைத்துறையை ஆள அடித்தளம் இட்டவர் கவிஞர் கா.மு.ஷெரீப். இன்றைக்கும் கழக உடன்பிறப்புகளின் உணர்ச்சி கீதமாக இருக்கும் 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்ற பாடலைத் தந்தவர் நாம் பெரிது மதிக்கும் நாகூர் ஹனிபா.

முதன்முதலாகக் கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியில், பேரறிஞர் அண்ணாவிற்குப் பக்கபலமாக இருந்து திமுக. வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தத் துணை நின்றவர், கண்ணியமிகு காயிதே மில்லத் தான். அந்த உறவின் அடையாளமாகத்தான், சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்காக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திட்டங்கள் அறிவித்துச் செயல்படுத்துகிறோம்.

சிறுபான்மையினருக்கான திட்டங்கள்:

  • பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சிறுபான்மை மக்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு!
  • சிறுபான்மையினர் நல ஆணையம்!
  • தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்!
  • உருது அகாடமி!
  • தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவுக்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி!
  • ஹஜ் மானியம் அதிகரிப்பு!
  • நபிகள் நாயகம் பிறந்தநாள் அரசு விடுமுறையாக அறிவிப்பு!
  • சிறுபான்மையினர் நல இயக்ககம்!
  • சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் என்று, இப்படி கருணாநிதி வகுத்துத் தந்த பாதையில், நம்முடைய திராவிட மாடல் அரசு சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தினோம். அதில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அறிவிப்புகளை அப்போதே வெளியிட்டேன்.
  • பள்ளி வாசல்கள் மற்றும் தர்க்காக்கள் மேம்பாட்டுக்கான மானியத் தொகை 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
  • வக்பு சொத்துக்களை சர்வே செய்வதற்காக 2 கோடி ரூபாய் அரசு நிதி!
  • கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான்களுக்குப் புதிதாகச் சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க நிதி!
  • தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், 9 ஆயிரத்து 217 சிறுபான்மையின பயனாளிகளுக்கு, 62 கோடி ரூபாய் கடன்!

அதில், முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால், மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதை வழங்க வேண்டும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினேன்.

வழக்கம்போல் தமிழ்நாட்டிலிருந்து வந்த கடிதம் என்று அவர் கவனிக்கவில்லை போல. நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கல்வி உதவித் தொகையை இனி தமிழ்நாடு அரசே வழங்கும் என்று அந்த கூட்டத்திலேயே நான் அறிவித்தேன். இனி அந்த உதவித்தொகை, தமிழ்நாடு அரசு உதவியோடு வக்பு வாரியங்கள் மூலம் முஸ்லீம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, வாழ்நாள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் கோரிக்கை. மாநில அரசால், கல்வி நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். இப்படி எண்ணற்ற சாதனைகளைச் சிறுபான்மையின மக்களுக்குச் செய்து கொடுத்த - செய்து கொடுக்கும் - செய்யப் போகும் - அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி: அதிமுக ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி. இப்போது பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, புதியதாகச் சிறுபான்மையினர் மேல் அக்கறை வந்தது போன்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இப்போது சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று மோடியும் – அமித்ஷாவும் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சட்டம் கடந்த 2019-இல் மாநிலங்களவையில், அதிமுகவும் - பாமகவும் ஆதரித்து ஓட்டுப் போட்டதால் தான். இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வந்திருக்கிறது.

எவ்வளவு பெரிய துரோகத்தைச் சிறுபான்மையின மக்களுக்குச் செய்துவிட்டு, இப்போது அந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்வது, பசப்பு நாடகம் இல்லையா? இதில் கடந்த 5 ஆண்டில் நம்முடைய எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்? மத்திய அரசு மக்கள் விரோதச் சட்டங்கள் கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியையும் எவ்வளவு போராட்டம் நடத்தினோம்.

சி.ஏ.ஏ: சி.ஏ.ஏ. சட்டம் வந்தபோது, திமுகவும் தோழமைக் கட்சிகளும் தான் உறுதியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, எதிர்த்து வாக்களித்தது. பழனிசாமி என்ன செய்தார்? நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல, அதில் எந்த முஸ்லீம் பாதிக்கப்படுகிறார் என்று, அட்டர்னி ஜெனரல் மாதிரி 'லா பாய்ண்ட்' எல்லாம் பேசினார்.

மோடிக்கான விசுவாசம்: இந்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாகப் போராடிய மக்கள் மேல், பெண்கள் - குழந்தைகள் என்று கூட பார்க்காமல் லத்தி சார்ஜ் செய்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்துச் சென்னையில் போராடிய என் மேலும், ப.சிதம்பரம், திருமாவளவன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, உதயநிதி உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மேல் ஒரே நேரத்தில் F.I.R போட்டு மோடிக்கும் – அமித்ஷாவுக்கும் தன்னுடைய விசுவாசத்தை வெளிக்காட்டினார் பழனிசாமி.

ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல், சி.ஏ.ஏ.க்கு எதிராகக் கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தி, இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினோம். சி.ஏ.ஏ. ரத்து செய்வதற்குச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த உடனே ஒட்டுமொத்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன், அவையை விட்டே ஓடிவிட்டார் பழனிசாமி.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். இதேபோன்று ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்து, பொடா சட்டத்தை ரத்து செய்தோம். ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, சி.ஏ.ஏ.-வும் ரத்து செய்யப்படும்.

பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு மட்டுமல்ல, பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார் பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தார். எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று உழவர்களின் துயரத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டே, பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தார் பழனிசாமி.

இந்த லட்சணத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எப்படி மோடியை எதிர்க்க முடியும். ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்ப்பேன் என்ற வியாக்கியானம் பேசுகிறார். மக்கள் விரோதச் சட்டங்கள் எல்லாம் கொண்டு வந்தபோது, அந்த புலிப்பாண்டி – எலிப்பாண்டியாக மாறி பாஜக காலில் விழுந்து கிடக்கிறார்.

இத்தனையையும் செய்துவிட்டு, கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி சொல்வது போல் நாதஸ் திருந்திட்டான் என்று இப்போது பேசிக் கொண்டு, வாக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறார். சொரணையும், சுயமரியாதையும் இல்லாத பழனிசாமி போன்று இல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எந்த நிலைமையிலும் மக்கள் விரோத பாஜக அரசை திமுக எதிர்க்கும்.

தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும். அதிமுக அடிமைக் கூட்டம் போன்று, பாஜகவை எதிர்க்க வக்கில்லாமல், அதற்கு எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்.எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான் தமிழ்நாட்டு உரிமைக்காகப் போராடினோம்.

இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும், ஆளுநரின் அத்துமீறல், தமிழ்நாட்டிற்கான நிதி என்று எல்லா பிரச்சனையிலும் உச்சநீதிமன்றம் வரை சென்று, பாஜக அரசுக்கு எதிராக வாதாடி நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுகிறோம்" என்று பேசினார்.

இதையும் படிங்க:"மத்திய, மாநில அரசு நாடாளுமன்றத் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய முயல்வார்கள்" - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details