சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு (ஜூலை 5) மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இச்சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து தப்பிச் சென்ற கொலையாளிகளை வலைவீசித் தேடிவந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் 8 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், போலீசாரிடம் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்த திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.