சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்புணர்வு செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி ஒரு சிலர் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் அரசு, முக்கியமாக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளாரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வரும் சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி தமிழ்நாடு அரசிற்கு அவ்வபோது சுட்டிக்காட்டி வருகிறோம்.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்துள்ள பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்திருந்தாலும், அந்த குற்றச்செயல் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி ஒரு சிலர் அதில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே, அரசு குறிப்பாக, காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.