தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி.. நேரடியாக முதலமைச்சரரை சந்திக்க உள்ள விசிக தலைவர் திருமாவளவன்! - mk stalin

Thirumavalavan: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Thirumavalavan plans to Meet mk stalin on parliament election seat sharing issue
தொகுதிப் பங்கீடு தொடர்பாக மு.க.ஸ்டாலினைச் சந்திக்க திருமாவளவன் திட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 2:44 PM IST

சென்னை: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி சில வாரங்களில் அறிவிக்கப்படும் என என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் திமுக அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளிலேயே திமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முன்னிலை வகித்து வருகிறது எனலாம்.

குறிப்பாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (இந்தியா கூட்டணி) தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய காங்கிரஸ், மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதிலும் ஏற்கனவே முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்திருக்கக் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு, திமுக தலைமை அலுவலகம் வராமல் போக்கு காட்டி வருகிறது.

நடைபெற்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த முறை 2 தனித் தொகுதிகள் மற்றும் 1 பொதுத் தொகுதியினை உறுதியாகக் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த தேர்தலைப் போல இரண்டு தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்க முன்வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தைக்கு தற்போது வரை திமுக அழைத்தும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரண்டு முறை அழைத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சு வார்த்தைக்கு வராத நிலையில் தொடர்ச்சியாகத் தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யும் விதமாக, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலினைச் சந்தித்துப் பேச திருமாவளவன் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவதன் மூலமாக, தங்களின் கோரிக்கைகள் சுமூக முடிவை எட்டும் என திருமாவளவன் நம்புவதாகவும், எனவே விரைவில் முதலமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: 'மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவோம்' - செல்வப்பெருந்தகை

ABOUT THE AUTHOR

...view details