சென்னை:தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்று இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.
திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu) அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்திய கூட்டணித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுத் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த தேர்தல் குறித்து அனைவரும் தமது கருத்துக்களை விரிவாக முன் வைத்தனர்.
பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கடந்த முறை பெற்றதை விட 63 தொகுதிகளை இழக்கும் நிலை பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. பாஜகவால் நிலையான ஆட்சியைத் தர முடியாது. பிற கட்சிகளின் தயவை நாட வேண்டும் என்கிற நிலையில், பாஜகவை மக்கள் நெருக்கடிக்கு தள்ளியுள்ளார்கள்.
இந்தியர்களை இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பாகுபடுத்தி மத வெறியை தூண்டினார்கள். குழந்தை ராமருக்கு கோயில் கட்டி கொண்டாடினார்கள். இவையெல்லாம் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக நடத்திய நாடகம் என்பதை பெரும்பான்மை இந்து சமூகம் உணர்ந்து கொண்டது. அதற்கு அடையாளமாகத் தான் உத்திரப்பிரதேசத்தில் படுதோல்வியை பாஜகவிற்கு அளித்துள்ளார்கள்.
இந்த தேர்தல் முடிவு பாஜகவிற்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பு என்பதை இந்திய கூட்டணி உணர்ந்துள்ளது. பாஜகவால் ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்க முடியாது. அவர்களுக்கு இடையே அதிகாரச் சண்டை எழலாம். ஒற்றுமை இல்லாத நிலை ஏற்படலாம்” என்றார்.
தமிழகத்தில் பாஜகவிற்கு இடம் இல்லை:தமிழகத்தில் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை அதிகமாக உள்ளது, 2026ம் தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என பாஜகவினர் கூற்றுக்கு பதிலளித்தவர், பாஜக தனித்துப் போட்டியிட்டு இந்த சதவீதத்தை பெற்றிருந்தால் அவர்கள் சொல்வதில் ஒரு பொருள் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அவர்கள் போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். இதெல்லாம் தற்காலிகமானவை. இது பாஜகவிற்கே உரித்தான வாக்கு வங்கி இல்லை.
பாஜக வாங்கிய வாக்குகள் எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகள். ஆகவே அது பாஜகவின் வாக்கு வங்கி கணக்கில் சேராது. அது ஒரு மாயை. தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு இடமில்லை என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவு உணர்த்துகிறது. அவர்கள் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை தக்க வைக்க முடியவில்லை. இதுதான் இந்த தேர்தல் மதவாத சக்திகளுக்கு உணர்த்தும் பாடம்” என்றார்.
மாநில கட்சி அந்தஸ்து:மேலும், அவர் பேசுகையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், 25 ஆண்டு கால போராட்டத்தின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக பரிணமித்துள்ளோம். இந்த வாய்ப்பை வழங்கிய வாக்காளர் பெருமக்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அனைவருக்கும் நன்றி.
நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் உள்ளிட்டோரின் சிலைகள் வரிசையாக நிறுவப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த சிலையை எல்லாம் நாடாளுமன்ற நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. அனுமதி உடன்தான் இதைச் செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்கள்.
ஒரே இடத்தில் இந்த தலைவர்களின் சிலைகள் எல்லாம் நிறுவுப் போவதாகவும், பார்வையாளர்கள் இவற்றையெல்லாம் எளிதாக பார்த்து இவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் இது ஏற்புடையதல்ல. புதிய வளாகத்தில் ஒவ்வொரு வாசலிலும் இந்த தலைவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி இல்லாததால்தான் தோல்வியா? - வானதி சீனிவாசன் சொல்லும் லாஜிக் இதுதான்! - Nda Consultative Meeting In Delhi