சேலம்: அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளாள குண்டம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் ஞானவேல் தலைமையில் பொதுக்கூட்டம் நேற்று (பிப்.20) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, "எய்ம்ஸ் மருத்துவமனையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பணிபுரிய இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார் அன்புமணி ராமதாஸ். டெல்லியில் சமுதாய ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தியது பாமக தான். குறிப்பிட்ட சில பேர் பாமக கட்சி வளரக்கூடாது என்று செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
இலவசமாக எதைக் கொடுத்தாலும் மக்கள் வாங்குவார்கள் என்ற சூழ்நிலையைத் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் உருவாக்கி உள்ளது. இலவசத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாமக கல்வி இலவசம், மருத்துவம் இலவசம், விவசாயிகளுக்கு டிராக்டர் மற்றும் சில உபகரணங்கள் இலவசம் எனக் கூறி தேர்தலைச் சந்திக்கிறோம். வேற எதையும் இலவசமாகத் தர மாட்டோம் என்று கூறி தேர்தலைச் சந்திக்கிறோம்.
தேர்தலுக்கு முன்பு, திமுக கட்சி குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 என்று கூறியது. ஆனால், தற்போது தகுதி பார்த்து மாதம் ரூ.1000 வழங்குகிறது. தகுதி பார்த்தா தேர்தலில் ஓட்டு வாங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த சமுதாயத்திற்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தரவினை மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசால் பத்து நாட்களுக்குள் வன்னிய மக்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அறிக்கையை மாவட்டம்தோறும் கேட்டுப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். வன்னிய மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் எத்தனை விழுக்காடு உயர்ந்துள்ளனர் என்ற அறிக்கையை ஒரு மாநில அரசால் தயாரித்துக் கொடுக்க முடியாதா? கடலூர் இடைத்தேர்தலின் போது வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் வழங்குவேன் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார் ஏன் இதுவரை அதனை செயல்படுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனம் இல்லை' என்று குற்றம்சாட்டினார். இதனால் திமுக கூட்டணியில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றும் சூசகமாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் நாராயணன், தலைவர் சிவராமன், அமைப்புச் செயலாளர் செல்வம் மாநில மாணவர் சங்க செயலாளர் விஜயராசா, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிவசங்கரன் பாண்டியன், பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் செந்தில் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இதையும் படிங்க:பட்ஜெட்டில் பங்கேற்காத ஓபிஎஸ்.. இருக்கை மாற்றம் தான் காரணமா?