சென்னை: முழுவதும் குளிர்வசதி செய்யப்பட்ட நடுத்தர தொலைவு கொண்ட நகர்களுக்கிடையே பயணம் செய்ய வசதியாக "வந்தே மெட்ரோ ரயில் தொடர்" தற்போது தயாரிப்பில் உள்ளதாகவும், அவை விரைவில் தயாரித்து இந்திய ரயில்வே இயக்கத்திற்கு அனுப்பப்படும் என்றும் ஐசிஎப் பொது மேலாளர் தெரிவித்தார்.
ஐசிஎப் விளையாட்டு அரங்கில் இன்று (ஜன.26) 75வது குடியரசு தின விழா தேசிய உணர்வோடு கொண்டாடப்பட்டது. ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு தளபதி ஐசிஎப் ஆய்வாளர் மாருதி பி.கோலாவே தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா, "இந்திய ரயில்வேயின் ஒரு பகுதியாக ஐசிஎப் பல்வேறு மேம்பாடுகளை மேற்கொண்டு, இந்திய ரயில் பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் பெரும் பங்காற்றுகிறது.
கடந்த ஆண்டில் ஐசிஎப் தேசிய அளவிலான சிறந்த திட்டத்திற்கான விருதை, இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த் திட்டம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் செனாப் ரயில் பாலம் போன்ற தலைசிறந்த திட்டங்கள் பெற்றது.
மேலும், ரயில் பெட்டிகள் தயாரிப்பதில் தலைசிறந்த நிறுவனம் என்ற விருதை நகர் கட்டமைப்பு வணிகத் தலைமை நிறுவனத்தின் 3வது வருடாந்திர விழாவில் பெற்றிருந்தது. ஐசிஎப்பின் உலோக ஆய்வுக்கூடம், இந்தியாவின் தலைசிறந்த ஆய்வு நிறுவனமான தேசிய ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட சான்றிதழ் அமைப்பில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்கிறது” என கூறினார்.
மேலும், அவர் ஐசிஎப் கடந்த ஆண்டில் "50வது வந்தே பாரத் ரயில் தொடரை" பல்வேறு சவால்களுக்கிடையில் தயாரித்துள்ளதாகவும், சாமானிய ரயில் பயணிகளுக்கு, முன் எப்போதும் இல்லாத வகையில் சுகமாக ரயில் பயணம் செய்ய "அம்ரித் பாரத் ரயில் தொடரை" சித்தரஞ்சன் ரயில் இஞ்சின் தொழிற்சாலையுடன் இணைந்து தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த, சில ஆண்டுகளாக ஐசிஎப் ரயில்வே உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கிடையே சிறந்த விளையாட்டுத் துறை சாதனை செய்ததற்கான வாரணாசிக் கோப்பையை வென்றுள்ளதாகவும், ரயில்வே விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ், செஸ் மற்றும் வாலிபால் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதாகவும் கூறிய மால்யா, ஐசிஎப் விளையாட்டு வீரர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை மின்சக்தி தயாரிப்பில் செய்துள்ள சாதனைகளைக் குறிக்கும் விதமாக ஐசிஎப் நிர்வாக அலுவலக வளாகத்தில் ஐ லவ் ஐசிஎப் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சூரிய சக்தி மரம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆண்டில் ஐசிஎப், இரண்டு முக்கிய ரயில் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். முழுவதும், குளிர்வசதி செய்யப்பட்ட நடுத்தர தொலைவு கொண்ட நகர்களுக்கிடையே பயணம் செய்ய வசதியாக "வந்தே மெட்ரோ ரயில் தொடர்" மற்றும் "ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காக அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் தொடர்" ஆகியவை தற்போது தயாரிப்பில் உள்ளதாகவும், அவை விரையில் தயாரித்து இந்திய ரயில்வே இயக்கத்திற்கு அனுப்பப்படும் என்றும் ஐசிஎப் பொதுமேலாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யாதா?" மாற்றுத்திறனாளி, வீராங்கனையின் தாயின் வேதனை..