கோயம்புத்தூர்:கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், "கோவை அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்போர் கூடம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டும் பணிகள் பூமி பூஜை உடன் துவங்கியுள்ளது. கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கவும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு நாடாமன்றத்தில் தொடர்ந்து அதிகாரிகள் குறித்து விமர்சனம் செய்வது தவறு எனவும், அரசியல் என்பது ஆளுகின்ற கட்சியை விமர்சிப்பது, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்பது என்பவை எல்லாம் இருந்தால் கூட தனிப்பட்ட தரம் தாழ்ந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது முகம் சுழிக்க வைப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனி மனித தாக்குதல்களை செய்கிறதாக தெரிவித்தார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பற்றி பேசும் போது பிராமணர்கள் பேசும் மொழியைக் குறிப்பிட்டு கேலி பேசுவது, பிராமணர்கள் பேசும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக தரம் தாழ்ந்த விமர்சனத்தைத் தொடர்ந்து செய்து வருவதாகக் கூறினார். தாங்களும் அவரது மனைவி அவர் பேசுகின்ற மொழி குறித்துப் பேசினால் நன்றாக இருக்காது என எச்சரித்தார். பிராமணர்கள் பேசும் மொழியை கேலி செய்து பேசுவது திமுக மற்றும் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களுக்கு வழக்கமாக இருப்பதாக கூறினார்.