புதுடெல்லி:புதிய பாம்பன் பாலத்தில் சில பாதுகாப்பு குறித்த முறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என ஐந்து நபர் குழு கூறியிருந்த நிலையில், இந்த மேம்பாலம் நவீன பொறியியல் அதிசயம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது குறித்து தமது எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,"இந்தியாவின் முதலாவது செங்குத்து தூக்கு பாலம். நாட்டின் பிற பகுதிகளை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் உள்ளது. இயந்திரவியலின் தனித்தன்மை மற்றும் கடினமான கடல் பகுதி ஆகிய ரயில்வேயின் சவாலான விஷயங்களுக்கு இடையே தற்போதைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இந்த பாலம் ஈர்த்துள்ளது.
புதிய பாம்பன் பாலமானது, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் செயல் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இந்த பகுதியின் சுற்றுலா, வர்த்தகம் ஆகியவை மேலும் விரிவடையும்,அத்துடன் வரலாற்று ரீதியிலான இந்த தீவுப்பகுதி நாட்டின் பிறபகுதிகளுடன் இணைக்கப்படும். பாம்பன் பாலம் வளர்ச்சியின் அடையாளமாக, நவீன பொறியியலுடன் மக்களையும், இடத்தையும் இணைக்கும் வகையில் உள்ளது,"என்றார்.
இதையும் படிங்க:ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் தலைமுடி சிக்கி கல்லூரி மாணவி மரணம்! இது எப்படி நிகழ்ந்தது?
தெற்கு வட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அண்மையில் பாம்பன் பாலம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். விதிமுறைப்படி சில குறைபாடுகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். புதிய பாலத்தின் வழியே பயணிகள் ரயில், சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கும் முன்பு குறைகளை சரி செய்யும்படியும் அறிவுறுத்தினார்.
2.08 கி.மீ நீளமுடைய புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப்பணியில் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டது. 72.5 மீ நீளம், 16 மீ அகலம் மற்றும் 550 டன் எடை கொண்ட தூக்கும் லிஃப்டை அதன் நீளத்துக்கு ஏற்ப ராமேஸ்வரத்தில் இருந்து கடற்பகுதியில் பாலத்தின் முடிவு வரை 450 மீட்டர் நீளத்துக்கு பாலத்துடன் பொருத்துவது இந்த பாலத்தின் கட்டுமானத்தில் சவாலான விஷயமாக இருந்தது.
"லிப்ட்டை நீளமாக நகர்த்தும் பணி கடந்த மார்ச் 10ஆம் தேதி தொடங்கியது. இன்றைய தேதி வரை 550 டன் எடை கொண்ட லிப்டை பாலத்தின் மையப்பகுதியை நோக்கி 80 மீட்டர் வரை நகர்த்தினோம். பாலத்தின் 2.65 டிகிரி வளைந்த பகுதி இந்த பணிக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த வளைவுப் பகுதி இல்லா விட்டால் லிப்டை விரைவாக நகர்த்தியிருக்க முடியும். ஆனால், பல்வேறு சீரமைப்பு மாற்றங்கள் காரணமாக வளைந்த வடிவம் இன்றியமையாததாக இருந்தது,"என ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்