சென்னை:சென்னை அடையாறு நகர்புற சமுதாய நல மையத்தில் 'குழந்தை நலத்திட்டங்களின்' தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குழந்தை நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "2024 - 2025 ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை போது 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நான்கு அறிவிப்புகள் இங்கே செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
நான்கு திட்டங்கள்:பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளைக் கண்டறிந்து முழுமையான உடல் பரிசோதனைகளை செய்வதற்கு அரசு மருத்துவமனைகளில் ஆயிரம் இடங்களில் அதை செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் பிரத்தியேக அடையாள அட்டைகள் ( Child Health Card) என்கின்ற வகையில் அடையாள அட்டைகள் தரும் பணிகள் தொடங்கி உள்ளோம். இது மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நலத்தைக் கண்காணிப்பதற்காக சிறப்பு மையங்கள் ஹெல்த் பேபி கிளினிக் ( Health Baby Clinic ) என்கின்ற வகையில் 400 இடங்களில் தமிழ்நாட்டின் இந்த ஹெல்த் பேபி கிளினிக் சிறப்பு மையங்களையும் இங்கிருந்து தொடங்கி வைத்து இருக்கிறோம்.
இதன் மூலம் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிவது. அதனை ஆரம்பக்கட்டங்களிலே கண்டறியப்பட்டு குறைபாடுகளை தீர்வு காண்பது வளர்ச்சி குறைபாடுகள், செவித்திறன் குறைபாடுகள், பார்வை குறைபாடுகள் போன்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பாக வாழுவும் வளரும் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம்.
சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இந்த திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தபடியே சுவாசம், இதயத் துடிப்பு போன்றவற்றை 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களால் கவனிக்க முடியும்.