சிவகங்கை:காரைக்குடியில் உள்ள ஐந்து விளக்கு சுந்தரம் செட்டியார் தெருவில் வசிப்பவர் சரவணன். இவர் நேற்று இரவு சென்னை சௌகார்பேட்டையில் 80 பவுன் தங்க நகைகள் மற்றும் ஏழு கிலோ வெள்ளி கட்டியை வாங்கிக் கொண்டு காரைக்குடி திரும்பியுள்ளார். அவர் புதிய பேருந்து நிலையம் பேருந்தில் இருந்து இறங்கி, அங்கிருந்து ஐந்து விளக்கு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து சென்ற கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது அவரை மூன்று இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த ஆறு பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். சரவணனை நெருங்கிய அவர்கள், பட்டா கத்தியைக் காட்டி நகைகளை அவர்களிடம் கொடுத்து விடுமாறு மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரவணன் நகைகளை சென்னையில் இருந்து வாங்கி, காரைக்குடியில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்வதை தொழிலாக செய்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் யாராவது திட்டம் போட்டு நகைகளை கொள்ளையடித்தனரா என்னும் கோணத்தில் காரைக்குடி காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.