சென்னை:பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மாணவர்கள் உயர்கல்வியில் வரும் நாட்களில் சேர உள்ளனர். ஆனால், அவர்களில் சிலர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக நேரடியாக கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படும். தாெலைநிலைக் கல்வி மூலமாக ஆன்லைன் முறையில் மாணவர்கள் படிக்க விரும்புகின்றனர்.
இந்தநிலையில், பல்கலைக் கழக மானியக்குழு தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில், 'பல்கலைக் கழக மானியக்குழுவின் அனுமதியை பெற்றுள்ள மாநில, உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து விபரத்தையும், அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவுகள் குறித்த விபரத்தையும் https://deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை மாணவர்கள் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். மேலும், பல்கலை மானியக் குழு விதிமுறைகளின் படி, தொலைதுார கல்வி முறையில் சேரும் மாணவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளில் மட்டும் சேர்க்கை புரியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக விதிமுறையை பின்பற்றாத மூன்று பல்கலைகளுக்கு, பிப்ரவரி 2024 முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகமான பெரியார் பல்கலைக்கழகமும் இடம் பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் பொது அறிவிப்புகள் https://deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன. மாணவர்கள் சேர்க்கைக்கு முன்பு அதைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைநிலைக் கல்வி முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு சில பாடப்பிரிவுகளை தடை செய்துள்ளது. அதில், பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, தொழில்சார் சிகிச்சை மற்றும் பிற துணை மருத்துவ துறைகள், மருந்தகம், நர்சிங், பல் மருத்துவம், கட்டிடக்கலை, சட்டம், விவசாயம், தோட்டக்கலை, ஹோட்டல் நிர்வாகம், கேட்டரிங் தொழில்நுட்பம், சமையல் அறிவியல், விமான பராமரிப்பு, காட்சி கலை மற்றும் விளையாட்டு உட்பட சில படிப்புகள் நடத்த அனுமதி இல்லை.
இதுபோன்ற பாடங்களை எந்த கல்வி நிறுவனங்கள் ஆன்லைன், தொலைதுார முறையில் நடத்தினாலும், மாணவர்கள் சேர வேண்டாம். அங்கீகாரம் பெற்ற பல்கலைகளும், அந்தந்த எல்லைகளுக்குள் மட்டுமே செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்' என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆண்களை விட பெண்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகம் - ஏன் தெரியுமா?