சென்னை:சென்னை, பம்மல் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுல் (24). கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (24). விஷ்ணு மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், இருவரும் வார இறுதி நாளை கொண்டாட பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் ஆறாவது தெருவில் வசித்து வரும் அஜேஷ் என்பவர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் குடிப்பதற்கு மது இல்லாததால், மது வாங்க கேடிஎம் பைக்கில் நள்ளிரவில் பள்ளிக்கரணை அருகே உள்ள 200 அடி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் விற்பனை செய்து வந்த மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வேளச்சேரி-மேடவாக்கம் பிரதான சாலையில் இருவரும் அதிவேகமாக சென்றுள்ளனர்.
அப்போது பள்ளிக்கரணை குளம் அருகே அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தபோது, சென்டர் மீடியனில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு, பின்னர் மின் கம்பத்தில் மோதி இருவரும் எதிர் திசையில் உள்ள சாலையில் விழுந்தனர். இதில் கோகுல் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணு நெஞ்சு பகுதியில் பலத்த காயங்களுடன் அதே இடத்தில் உயிர் இழந்தார்.