தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டையில் பழைய வீட்டை இடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில், இடுபாடுகளில் சிக்கி இரு தொழிலாளர்கள் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்துயர சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இன்று பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வசிக்கும் பைசல். இவர் தற்போது வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது பழைய வீட்டை இடிக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர்.
அவர்களுடன் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்த குணசேகரன் மகன் மணிகண்டன் (27) மற்றும் அய்யம்பேட்டை இரட்டை தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் குமார் (20) என்பவரும் வீடு இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வீடு இடித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக சுவர் விழுந்ததில் இடிப்பாடுகளில் இரு தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கும்போது இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவர் உடல்களையும் கைப்பற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது