கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கரிய மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (48). இவர் பெயிண்டராக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மகன் ஆகாஷ் (21). இவர் ஐடிஐ (ITI) படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆகாஷ் மற்றும் இடலாக்குடி அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சஜித்(24), சபையார் குளத்தைச் சேர்ந்த மதன் ஆகியோர் நண்பர்கள். இந்நிலையில், ஆகாஷ் - சஜித் ஆகிய இருவரும் வழக்கம் போலச் சபையார் குளம் பகுதியில் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் மற்றும் மதன் உட்பட மேலும் சிலர் அங்கு வந்துள்ளனர். ராகுலுக்கும், மதனுக்கும் இடையே அடிக்கடி சிறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதும், அதனை ஆகாஷ் - சஜித் ஆகிய இருவரும் சேர்ந்து சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ராகுலுக்கும், மதனுக்கும் இடையே மீண்டும் திடீரெனத் தகராறு ஏற்பட்டதாகவும், அதனை ஆகாஷ் - சஜித் ஆகிய இருவரும் சேர்ந்து சமாதானம் செய்து வைத்து, அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் தகராறு அதிகரித்துக் கொண்டே சென்றதால், அங்கு மேலும் சிலர் வந்ததாகவும், அவர்கள் ராகுலுக்கு ஆதரவாக மதனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆகாஷ் - சஜித் ஆகிய இருவரும் அந்தக் கும்பலைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆகாஷை அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியதுடன், சமரசம் செய்ய நீ என்ன பெரிய ஆளா? என்று கேட்டு, தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஆகாஷை குத்தியதாகவும், இதைத்தடுக்க முயன்ற சஜித்துக்கும் கத்திக் குத்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.