தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஐடி ஊழியர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை.. இருவர் கைது..! - DRUGS SELLERS ARRESTED IN CHENNAI

சென்னையில் ஐடி ஊழியர்களை குறிவைத்து போதைப்பொருளை விற்பனை செய்த இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5.5 கிராம் மெத்தபெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

drugs sellers arrested in chennai
கைது செய்யப்பட்டுள்ள ஷாம் சுந்தர் மற்றும் ஜெகதீஷ் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 6:02 PM IST

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டு, தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கைகளையும் செய்திருப்பதாகவும், அதேபோல தரமணி உதவி ஆணையாளர் சையத் பாபு தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை ஏதாவது செய்யப்படுகிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியம் அருகே தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்ததும், மேலும் அவர் வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர் (25) என்பதும் தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில், சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (26) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:'சார் நீங்க எந்த ஸ்டேசன்' - வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலி போலீஸ்..வசமாக சிக்கியது எப்படி?

இதனை அடுத்து, ஷாம் சுந்தர் மற்றும் ஜெகதீஷ் இருவரிடம் விசாரணை நடத்தியபோது கடந்த 2020-2021ஆம் ஆண்டு துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்த போது நண்பர்களாகி அதன் பிறகு இருவரும் அதிகம் பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் விற்பனையில் இறங்கியதாக தெரிவித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, ஜெகதீஷ் பேருந்து அல்லது ரயில் மூலம் மும்பை பெங்களூருக்கு சென்று குறைந்த விலையில் மெத்தபெட்டமைன் என்கிற போதைப்பொருளை வாங்கி வந்து ஷாம் சுந்தருடன் சேர்ந்து தரமணி, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐடி ஊழியர்களை குறி வைத்து போதைப்பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாகவும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், ஷாம் சுந்தர் மற்றும் ஜெகதீஷ் இருவரிடம் இருந்தும் சுமார் 5.5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details