சென்னை: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏற்கனவே இந்தியாவில் உள்ள 82 ராம்சார் தளங்களுடன், தமிழ்நாட்டில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், கழுவேலி பறவைகள் சரணாலயம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீர்த்தேக்கம் ஆகிய மூன்றும் புதிய ராம்சார் தளங்களாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள 85 ராம்சார் தளங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 தளங்கள் உள்ளன. இதனால், நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக ராம்சார் தளங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக, 10 ராம்சார் தளங்களுடன் உத்தரப்பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்: தற்போது தமிழ்நாட்டில் இருந்து புதிதாக இனைக்கப்பட்ட நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் என்பது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய ஆழமற்ற ஈரநிலமாகும். இப்பகுதியில் உள்ள ஈரநிலங்கள் முக்கியமாக வானிலை நிலைமைகளைப் பொறுத்தது, குறிப்பாக நல்லார் வடிகாலில் இருந்து வரும் கனமழை நீரைப் பொறுத்தது.
மேலும், சுமார் 191 வகையான பறவைகள், 87 வகையான பட்டாம்பூச்சிகள், 7 வகையான நீர்நில வாழ் உயிரினங்கள், 21 வகையான ஊர்வன, 11 வகையான சிறிய பாலூட்டிகள் மற்றும் 77 வகையான தாவரங்கள் ஏரியிலும் அதைச் சுற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் ஏரி அறிவிக்கப்பட்டுள்ளது.
கழுவேலி பறவைகள் சரணாலயம்: 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாக 5,151.6 ஹெக்டேருக்கும் அதிக பரப்பளவில் அமைந்துள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு ஆழமற்ற உவர்நீர் ஏரியாகும்.