சென்னை:சென்னை கீழ்பாக்கம் அடுத்த டிபி சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் அமுதா. இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி தனது வீட்டின் வெளியே தனது சகோதரி மற்றும் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் அமுதா மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டு வீட்டின் சுற்றுச்சுவர் மீது விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிபி சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பெட்ரோல் குண்டு வீசியது டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற ஜன்டா, மனோஜ் குமார் உள்பட மூன்று பேர் என்பது தெரிய வந்தது.
மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு சந்தோஷ் என்பவர் தனது வீட்டின் அருகே கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததை அமுதா கண்டித்ததும், அது குறித்து அவர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரிய வந்துள்ளது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, தனது கூட்டாளிகளுடன் இந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்து சந்தோஷ், தன்னை போலீசாரிடம் காட்டிக் கொடுத்ததால் அமுதாவை பழிவாங்குவதற்காக, அவரது சகோதரியின் கணவர் செந்தில்குமார் என்பவரையும் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமுதா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தப்பி ஓடிய சந்தோஷ், மனோஜ் குமார் உள்ளிட்ட மூன்று பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை பகுதியில் சந்தோஷ், மனோஜ் குமார் உள்ளிட்டோர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து வரும்போது, அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தப்பி ஓடும்போது இருவரும் தவறி விழுந்ததில் இருவருக்கும் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து கைது செய்யப்பட்ட இருவரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம்: இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அமுதாவின் உறவினர் செந்தில்குமார் தங்களை போலீசாரிடம் சிக்க வைத்துவிட்டு, அவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், இதனால் அவரை அச்சுறுத்தும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை; மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்!