ஈரோடு : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தச்சு பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில் (35). விவசாயியான இவர் தோட்டத்திற்கு சென்று விட்ட நிலையில், அவரது மனைவி ரேணுகா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது ஐயப்ப பக்தர்கள் போல் மாலை அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பூஜை செய்ய நன்கொடை வேண்டும் என கேட்டுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பணம் எடுத்து வந்த ரேணுகாவின் முகத்தில் திடீரென விபூதி போன்ற பொடியை கண்ணில் தூவியதால் ரேணுகா மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
அப்போது ரேணுகா காதில் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் தோடுகளை இருவரும் திருடிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரேணுகாவின் கணவர் செந்தில் புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.